×

சாலையில் திரிந்த மாடுகளை பிடித்தபோது மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் மாடுகளின் உரிமையாளர்கள் அடாவடி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு

 

சென்னை, ஆக.13: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பிடித்தபோது, மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாட்டின் உரிமையாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் எச்சரித்தார். அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹர்ஷன் பானு என்பவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது 2 மகள்களை பள்ளி முடிந்ததும், வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாடுகள் கூட்டமாக சென்றன.

அதில் ஒரு மாடு திடீரென 9 வயது சிறுமி ஆயிஷாவை வெறிபிடித்தது போல் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. பின்னர் கீழே விழுந்த சிறுமியை விடாமல் குத்தியதுடன், மதித்து பந்தாடியது. அருகில் இருந்தோர் கூச்சலிட்டு மாடு மீது கற்களை வீசி காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாத மாடு சிறுமியை தொடர்ந்து தாக்கியது. ஒரு கட்டத்தில் அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மாட்டினை பிரம்பால் அடித்து துரத்தினர். அதன்பிறகு படுகாயமடைந்த சிறுமியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வருகிறார். அச்சிறுமியை மேயர் பிரியா சந்தித்து நலம் விசாரித்தார்.

மாடுகளை சாலையில் திரிய விடுவதால்தான் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்றும், இதுபோல், மாடுகளை சாலையில் திரியவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குறிப்பிட்ட மாட்டினை பிடித்து, மாட்டு தொழுவத்தில் அடைத்த மாநகராட்சி அதிகாரிகள், அந்த மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, சென்னை முழுவதும் சோதனை நடத்தி, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, தொழுவத்தில் அடைத்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை அங்கு வந்து, சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க முயன்றனர். இதற்கு மாட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மாட்டின் உரிமையாளர்களிடம், விதிகளை மீறி சாலையில் மாடுகளை திரியவிட்டால், அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், என ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

ஆனால் அவர்கள் அதை ஏற்கமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று கூடத்தான் லாரி மோதி 4 பேர் இறந்தனர். அதற்காக, லாரிகளை தடை செய்துவிடுவீர்களா என்று கேட்டனர். அப்போது மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,‘‘மாடுகளை சாலையில் திரிய விடக்கூடாது என்ற விதி உள்ளது. அதை யாரும் மீறக்கூடாது. மாட்டிற்கு உணவு அளிக்காமல் எங்காவது மேயவிட்டு அதற்கு நோய் வந்தால் என்ன செய்வீர்கள், இது தவறு, என்று எடுத்துரைத்தார். மேலும், தொடர்ந்து இதுபோல் மாடுகள் சாலையில் திரிந்தால், அபராதம் விதிக்கப்படும், என எச்சரித்து சென்றார்.

The post சாலையில் திரிந்த மாடுகளை பிடித்தபோது மாநகராட்சி ஆணையரிடம் வாக்குவாதம் மாடுகளின் உரிமையாளர்கள் அடாவடி: திருவல்லிக்கேணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Adavadi ,Tiruvallikeni ,Chennai ,Commissioner ,Radhakrishnan ,Tiruvallikeni Parthasarathy Temple ,
× RELATED வாங்கிய 7 மாதத்தில் 3 முறை பழுது; ஷோரூம்...